விபூதி மகிமை - 1

திருச்சிற்றம்பலம்
𑌶𑍍𑌰𑍀 𑌜𑍍𑌞𑌾𑌨𑌸𑌮𑍍𑌬𑌨𑍍𑌧 𑌗𑍁𑌰𑍁𑌭𑍍𑌯𑍋 𑌨𑌮𑌃
வேதோக்த புராணப் பிரமாண பஸ்ம மகிமை
சிவமஹாபுராணம் — வித்யேஸ்வர ஸம்ஹிதை — 24ஆம் அத்தியாயம்
“பஸ்மதாரண மாஹாத்ம்யம் ந சக்யம் பரிபாஷிதும்”
— சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.28
விபூதி மகிமை
விபூதி, பஸ்மம், திருநீறு — சைவ சாஸ்திரப் பிரமாணம்

முன்னுரை

விபூதி, ரக்ஷை, பஸ்மம், நீறு என்று பல பெயர்களில் சான்றோர்களால் புகழப்பட்ட இந்த சாதனத்தின் பெருமையை வேத சிவாகம புராணங்களிற் கூறப்பட்ட வழி காண்க. இந்த பகுதி சிவமகாபுராணம் வித்யேஸ்வர சங்கிதையில் 24 ஆம் அத்தியாயம் பஸ்ம மகிமையை கூறுகிறது. அவற்றுள் சில:

1. அக்னிஹோத்ராதி யாக பஸ்மம் சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.7
அக்னிஹோத்ரோத்திதம் பஸ்ம ஸங்க்ராஹ்யம் வை மனீஷிபிஃ ।
அந்யயஜ்ஞோத்திதம் வாபி த்ரிபுண்ட்ரஸ்ய ச தாரணே ॥ ௭ ॥
ஸ்லோகம் 7
பொருள் :

அக்னிஹோத்ரத்திலிருந்து கிடைக்கும் திருநீற்றையோ, அல்லது வேறு யாகங்களில் உண்டாகும் திருநீற்றையோ — திரிபுண்டரம் அணிவதற்காக புத்திமான்கள் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

2. ஜாபால உபநிடத மந்திரங்களால் பஸ்ம தூளனம் சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.8
அக்னிரித்யாதிபிர்மந்த்ரைர் ஜாபாலோபநிஷத்கதைஃ ।
ஸப்தபிர் தூளனம் கார்யம் பஸ்மனா ஸஜலேன ச ॥ ௮ ॥
ஸ்லோகம் 8
பொருள் :

அக்னிரிதி எனத் தொடங்கும் ஜாபால உபநிடத மந்திரங்களால் அபிமந்திரித்து, பஸ்மத்தை நீருடன் குழைத்து ஏழுமுறை பூசுதல் வேண்டும்.

குறிப்பு :

பஸ்ம ஜாபால உபநிடதத்தில் முதல் அத்தியாயத்தில் “அக்னிரிதி பஸ்ம” எனத் தொடங்கும் மந்திரங்கள் உள்ளன.

3. சிவன், விஷ்ணு, உமா, லக்ஷ்மி முதலியோரும் திரிபுண்டரம் சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.11–12
சிவேன விஷ்ணுநா சைவ ததா திர்யக் திரிபுண்ட்ரகம் ।
உமாதேவ்யா ச லக்ஷ்ம்யா ச வாசாந்யாபிஶ்ச நித்யஶஃ ॥
ஸ்லோகங்கள் 11–12
பொருள் :

சிவபிரான், விஷ்ணு, உமையவள், இலக்குமி மேலும் பல தேவிகளாலும் குறுக்காக திரிபுண்டரம் எப்போதும் நித்தியமாக அணியப்படுகிறது.

4. பஸ்மதாரண மாஹாத்ம்யம் அளவிட முடியாதது சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.28
ப்ரஹ்மணா விஷ்ணுநா வாபி ருத்ரேண முனிபிஃ ஸுரைஃ ।
பஸ்மதாரணமாஹாத்ம்யம் ந சக்யம் பரிபாஷிதும் ॥ ௨௮ ॥
ஸ்லோகம் 28
பொருள் :

பிரமா, விஷ்ணு, ருத்ரர்களாலும் முனிகணங்களாலும் தேவர்களாலும் கூட விபூதி தாரணத்தின் பெருமையை முழுமையாக விளக்கி விட முடியாது.

குறிப்பு :

“மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு” என்னும் தேவாரம் இதற்கு உபப்பிரமாணமாக உள்ளது.

5. எல்லா ஆஶ்ரமத்தாரும், பெண்களும், திரிபுண்டரத்தால் முத்தர் சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.40–41
ப்ரஹ்மசாரீ க்ருஹீ வன்யஃ ஸந்நியாஸீ வா வ்ரதீ ததா ।
நார்யோ பஸ்மதிரிபுண்ட்ராங்கா முக்தா ஏவ ந ஸம்ஶயஃ ॥ ௪௦–௪௧ ॥
ஸ்லோகங்கள் 40–41
பொருள் :

பிரம்மச்சாரி, இல்லறத்தான், வனப்ரஸ்தன், துறவியர், விரதமிருப்பவன், ஆண் பெண் என அனைவரும் பஸ்மத்தை திரிபுண்டரமாக அணிந்தால் அவர்கள் முத்தியடைவர். இதில் சந்தேகமில்லை.

திருமுறை உபப்பிரமாணம் :

“முத்தி தருவது நீறு” என்னும் சம்பந்தர் தேவாரமுங் காண்க.

6. திரிபுண்டரத்தை நிந்திப்பது சிவனையே நிந்திப்பது சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.44–45
திரிபுண்ட்ரம் யே விநிந்தந்தி நிந்தந்தி சிவமேவ தே ।
தாரயந்தி ச யே பக்த்யா தாரயந்தி தமேவ தே ॥ ௪௪ ॥

திக் பஸ்மரஹிதம் பாலம் திக் கிராமமஶிவாலயம் ।
திக் அநீஶார்சனம் ஜன்ம திக் வித்யாமஶிவாஶ்ரயாம் ॥ ௪௫ ॥
ஸ்லோகங்கள் 44–45
பொருள் :

திரிபுண்டரத்தை நிந்திப்பவர்கள் சங்கரனையே நிந்திப்பவர்கள். பக்தியோடு திரிபுண்டரத்தை அணிபவர்கள் பவனையே தம்மேல் அணிகிறவர்களாவர்.

விபூதி இல்லாத நெற்றி நிந்தைக்குரியது; சிவாலயம் இல்லாத ஊர் நிந்தைக்குரியது; ஈச்வராராதனை இல்லாத பிறப்பு நிந்தைக்குரியது; சிவத்தை ஆதாரமாகக் கொள்ளாத கல்வியும் நிந்தைக்குரியது.

7. ஊர்த்த்வபுண்டரம் மற்றும் தப்தசக்ரச் சின்னம் சிவயஜ்ஞத்தில் விலக்கப்பட்டது சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.48
ந தாந்த்ரிகஸ்த்வதிக்ருதோ நோர்த்த்வபுண்ட்ரதரோ முநே ।
ஸந்தப்தசக்ரசிஹ்னோऽத்ர சிவயஜ்ஞே பஹிஷ்க்ருதஃ ॥ ௪௮ ॥
ஸ்லோகம் 48
பொருள் :

முனிவரே! தாந்திரிக வழியில் நடப்பவரும், ஊர்த்துவ புண்டரம் அணிபவரும், சக்ரம், சங்கம் போன்ற அடையாளங்களை சூடுகுறியாக உடலில் கொண்டவரும், சிவ யாகத்திற்கு உரிய தகுதி பெறாதவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும் சிவயஜ்ஞத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள்.

குறிப்பு :

ஊர்த்துவ புண்டரம் வேத நெறியில் நடப்பவர்களால் விலக்கத்தக்கது. அது அற்ப பரிபாகிகளுக்குரியது என்பது இதனால் பெறப்பட்டது.

8. பிருஹத்ஜாபால உபநிடதப் பிரமாணம் சிவமஹாபுராணம், வித்யேஸ்வர ஸம்ஹிதை, 24.49
தத்ரைதே பஹவோ லோகா ப்ருஹஜ்ஜாபாலசோதிதாஃ ।
தே விசார்யாஃ ப்ரயத்நேன ததோ பஸ்மரதோ பவேத் ॥ ௪௯ ॥
ஸ்லோகம் 49
பொருள் :

இந்த விஷயத்தில், பிருஹத் ஜாபால உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள பல உபதேசங்கள் உள்ளன. அவை அனைத்தும் முயற்சியுடன், ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. அவ்வாறு ஆராய்ந்த பின், விபூதி மீது உறுதியான பற்றுடன் இருக்க வேண்டும்.

முடிவுரை

பஸ்ம சாபால, பிருஹத் சாபால உபநிடதங்கள் பிற்காலத்தவை என்று பொய்கூறித் திரியும் அவைதிகர்கள் வாதம் இந்த புராண வாக்கியங்களால் நிரஸ்தமானது. ஜாபால உபநிடதங்கள் இன்னும் பல ஆச்சாரியார்களாலும் புராணங்களாலும் எடுத்தாளப்பட்டுள்ளன.

விபூதி என்பது சாதாரண சாம்பல் அல்ல. அது வேதம், உபநிடதம், சிவபுராணம், சிவாகமம், திருமுறை ஆகிய அனைத்தாலும் புகழப்பட்ட சிவசின்னம். திரிபுண்டரம் தரிப்பது சிவபக்தியின் வெளிப்படையான முத்திரை; அதனை நிந்திப்பவன் சிவபிரானையே நிந்திப்பவன் என்று சிவமஹாபுராணமே கர்ஜிக்கிறது.

ஆகவே யோனி புண்டரம், ஊர்த்துவ புண்டரம், தப்தசக்ரம் முதலிய அவைதிகச் சின்னங்களை சைவ நெறிக்குள் புகுத்த முயலும் பஞ்சராத்திரிகளின் குருட்டு வாதம் இங்கு முற்றிலும் முறியடிக்கப்படுகிறது. வேத நெறியில் சிறந்த சைவத் துறையின் சின்னம் திருநீறே; சிவபக்தரின் நெற்றி திரிபுண்டரத்தாலேயே ஒளிர வேண்டும்.

மூல நூல் சரிபார்ப்பு இணைப்புகள்

Credit / Reference Lecture : Lord Shiva Lectures

Comments