விபூதி மகிமை - 2

திருச்சிற்றம்பலம்
𑌶𑍍𑌰𑍀 𑌜𑍍𑌞𑌾𑌨𑌸𑌮𑍍𑌬𑌨𑍍𑌧 𑌗𑍁𑌰𑍁𑌭𑍍𑌯𑍋 𑌨𑌮𑌃
வேதோக்த புராணப் பிரமாண பஸ்ம மகிமை
ஸ்கந்த மஹாபுராணம் — சேது மாஹாத்மியம்
“பஸ்மோத்தூலிதஸர்வாங்கஸ் த்ரிபுண்ட்ராங்கிதமஸ்தகஃ”
— ஸ்கந்த மஹாபுராணம், சேது மாஹாத்மியம்
ஸ்கந்த மஹாபுராண சேது மாஹாத்மியம் பஸ்ம மகிமை
சேது மாஹாத்மியத்தில் பஸ்மம், திரிபுண்ட்ரம், ருத்ராக்ஷம்

முன்னுரை

தச சைவ புராணங்களுள் மேன்மையாய் விளங்கும் ஸ்கந்த மஹாபுராணத்தில் உள்ள பிரம்ம காண்டத்தின் சேது மாஹாத்மியத்தில் பஸ்மத்தின் மகிமைகளும், பராசரர், சிந்துத்வீபர் முதலான முனிவர்கள் விபூதி அணிந்ததும், ஜாபால உபநிடதம் கூறிய முறைப்படி உத்தூளனம், திரிபுண்ட்ரம் முதலிய சைவ அனுஷ்டானங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்க.

பஞ்சராத்திரிகள் தங்கள் கற்பிதமான ஊர்த்துவபுண்டரத்தையும், கோபிசந்தனத்தையும், தப்தசக்ராதி சின்னங்களையும் வேதநெறியில் புகுத்த முயல்வது பரம அவைதிகம். சேது மாஹாத்மியத்தில் மீண்டும் மீண்டும் பஸ்மம், திரிபுண்ட்ரம், ருத்ராக்ஷம் ஆகிய சைவச் சின்னங்களே சிறந்தன என்று வெளிப்படையாக நிலைநாட்டப்படுகின்றன.

1. பிரம்மகுண்ட பஸ்மத்தின் மகிமை ஸ்கந்த மஹாபுராணம், சேது மாஹாத்மியம், அத்தியாயம் 14 — பிரம்மசாபவிமோசனவர்ணனம்

அயனும் மாலும் சங்கரன் முடியையும் அடியையும் பல காலங்கள் தேடி, ஒப்பிலாத அந்த சோதியின் ஆதி அந்தத்தை காணவியலாது அயர்ந்தனர். பின்னர் அயன் “நான் சங்கரன் முடியைக் கண்டேன்” என்று தாழம்பூவை சாட்சியாக வைத்து பொய் கூறவே, சிவபிரான் சினந்து அவனுக்கு பூவுலகில் வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்று சபித்தார். பின் அச்சாபம் நீங்க சேதுவின் கந்தமாதன பர்வத்தில் வந்து யாகம் செய்து பாவம் நீங்கப்பெற்றான். பிரமன் யாகம் செய்த இடம் பிரமகுண்டம் என்றறியப்படும்.

ப்ரஹ்மகுண்டே ஸக்ருத்ஸ்நாநம் வைகுண்டப்ராப்திகாரணம் ।
ப்ரஹ்மகுண்டஸமுத்பூதம் பஸ்ம யேந த்ருதம் த்விஜாஃ ॥ ௫ ॥

தஸ்யாநுகாஸ்த்ரயோ தேவா ப்ரஹ்மவிஷ்ணுமஹேஶ்வராஃ ।
ப்ரஹ்மகுண்டஸமுத்பூதபஸ்மநா யஸ்த்ரிபுண்ட்ரகம் ॥ ௬ ॥

கரோதி தஸ்ய கைவல்யம் கரஸ்தம் நாத்ர ஸஂஶயஃ ।
தத்பஸ்மபரமாணுர்வா யோ லலாடே த்ருதோ பவேத் ॥ ௭ ॥
ஸ்லோகங்கள் 5–7
பொருள் :

பிரஹ்மகுண்டத்தில் ஒருமுறை ஸ்நானம் செய்தாலே வைகுண்டப் பிராப்திக்குக் காரணமாகும். அங்கே தோன்றிய பஸ்மத்தைத் தாங்கி அணிந்தவர் புண்யம் பெறுவர். அப் பஸ்மத்தால் யார் திரிபுண்ட்ரத்தை இடுகிறாரோ, அவரைத் தொடர்ந்து பிரஹ்மா, விஷ்ணு, மஹேஸ்வரர் ஆகிய மூன்று தேவர்களும் துணை நிற்பர். அவருக்கு கைவல்யம் கையில் உள்ளதுபோல் உறுதி. அந்த பஸ்மத்தின் அணுவளவும் நெற்றியில் தங்கினால்கூட, சந்தேகமின்றி கைவல்யம் கிடைக்கும்.

2. ஜாபால உபநிடத முறைப்படி உத்தூளனம், திரிபுண்ட்ரம் ஸ்கந்த மஹாபுராணம், சேது மாஹாத்மியம், அத்தியாயம் 12

சோமவம்ச அரசன் மனோஜவ முதலில் பல யாகங்கள் செய்தவன். பின் அகங்காரத்தால் அரசாட்சி இழந்து வனத்திற்குச் செல்லும் போது பசி, துன்பத்தால் மிக வாடி, மனைவி சுமித்ரையிடம் “நான் முன்பு பக்தி, தர்மச் செயல்கள் செய்யவில்லை” என்று புலம்புகிறான். அந்தப் புலம்பலில் பஸ்மம், திரிபுண்ட்ரம், ருத்ராக்ஷம் ஆகிய சைவச் சின்னங்கள் நேரடியாக வருகின்றன.

ஹரிஶங்கரயோர்நாம்நாம் கீர்த்தனம் ந மயா க்ருதம் ।
உத்தூளனம் த்ரிபுண்ட்ரம் ச ஜாபாலோக்தைஶ்ச ஸப்தபிஃ ॥ ௪௯ ॥
ஸ்லோகம் 49
பொருள் :

“ஹரி, சங்கரர் என்ற இருவரின் நாமங்களையும் நான் புகழ்ந்து கீர்த்தனம் செய்ததில்லை. ஜாபால உபநிடதம் கூறிய ஏழு மந்திரங்களின்படி உடலில் விபூதி பூசி உத்தூளனம் செய்ததும் இல்லை; திரிபுண்ட்ரம் இட்டதும் இல்லை.”

3. பஸ்மம், ருத்ராக்ஷம், ருத்ரஸூக்தம், பஞ்சாக்ஷரம் ஸ்கந்த மஹாபுராணம், சேது மாஹாத்மியம், அத்தியாயம் 12
ந த்ருதம் பஸ்மநா பத்ரே ருத்ராக்ஷம் ந த்ருதம் மயா ।
ஜபஶ்ச ருத்ரஸூக்தாநாம் பஞ்சாக்ஷரஜபஸ்ததா ॥ ௫௦ ॥
ஸ்லோகம் 50
பொருள் :

“அன்புள்ளவளே! நான் பஸ்மம் அணியவில்லை; ருத்ராக்ஷம் அணியவில்லை. ருத்ரஸூக்த ஜபமும், பஞ்சாக்ஷர ஜபமும் செய்ததில்லை.”

குறிப்பு :

பஸ்மம், ருத்ராக்ஷம், ருத்ரஸூக்தம், பஞ்சாக்ஷரம் — இவை எல்லாம் சைவ நெறியின் வெளிப்படையான சின்னங்களும் அனுஷ்டானங்களும் ஆகும். இவற்றைத் தவிர்த்து, ஊர்த்துவபுண்டரம், தப்தசக்ரம், பஞ்சராத்திர சின்னங்கள் முதலியவற்றை உயர்த்திப் பேசுவது சிவபரத்துவத்திற்கு நேரான எதிர்வாதமாகும்.

4. பராசர முனிவர் விபூதி, திரிபுண்ட்ரம், ருத்ராக்ஷம் அணிந்தவர் ஸ்கந்த மஹாபுராணம், சேது மாஹாத்மியம், அத்தியாயம் 12
பஸ்மோத்தூலிதஸர்வாங்கஸ் த்ரிபுண்ட்ராங்கிதமஸ்தகஃ ।
ருத்ராக்ஷமாலாபரணஃ ஸிதயஜ்ஞோபவீதவான் ॥ ௫௯ ॥
ஸ்லோகம் 59
பொருள் :

அந்த பராசர முனிவர் உடலெல்லாம் பஸ்மம் பூசியவர்; தலையில் திரிபுண்ட்ரம் திகழும்படி வைத்தவர்; ருத்ராக்ஷ மாலைகளை அணிந்தவர்; வெண்மையான யஜ்ஞோபவீதம் அணிந்தவர்.

குறிப்பு :

பராசர முனிவர் விபூதி, ருத்ராக்ஷம் அணிந்தவர் என்பதை இதன் மூலம் அறியலாம். பஞ்சராத்திரிகள் அவரை ஊர்த்துவபுண்டரம் தரித்தவர் போலக் காட்டுவது பரம அவைதிகமாகும். பராசரர் போன்ற மஹரிஷிகளை பஞ்சராத்திர அடையாளங்களுக்குள் இழுத்து காட்டுவது குருட்டு மதவாதம்.

5. சிந்துத்வீப முனிவர் விபூதி, திரிபுண்ட்ரம் அணிந்தவர் ஸ்கந்த மஹாபுராணம், சேது மாஹாத்மியம், அத்தியாயம் 34

அத்தியாயம் 34 இல் நரி, குரங்கு இருவரும் தங்கள் பழைய பிறவிகளை நினைவுகூர்ந்து தங்கள் பாவக்காரணங்களைப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது சிந்துத்வீபன் என்ற முனிவர் அங்கே வருகிறார். அவர் வருகை அடையாளமாகவே விபூதி பூசி, திரிபுண்ட்ரம் தரித்தவர் என்று புராணம் சொல்கிறது.

ஆயயௌ ஸ மஹாதேஜாஃ ஸிந்துத்வீபாஹ்வயோ முநிஃ ।
பஸ்மோத்தூலிதஸர்வாங்கஸ் த்ரிபுண்ட்ராங்கிதமஸ்தகஃ ॥ ௩௧ ॥
ஸ்லோகம் 31
பொருள் :

அவ்வாறு குரங்கும் நரியும் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு, “சிந்துத்வீபன்” எனும் மஹாதேஜஸ்வி முனிவர் வந்தார். அவர் உடல் முழுவதும் திருநீறு பூசியவராகவும், நெற்றியில் திரிபுண்ட்ரம் அணிந்தவராகவும் இருந்தார்.

6. சேது யாத்திரைக்கு விபூதி, திரிபுண்ட்ரம் அனுஷ்டானம் ஸ்கந்த மஹாபுராணம், சேது மாஹாத்மியம், அத்தியாயம் 51

அத்தியாயம் 51 இல் சேது யாத்திரைக்கு தேவையான சுத்தி, நியமத்தில் விபூதி, திரிபுண்ட்ரம் அனுஷ்டானமாக சொல்லப்படுகிறது. அதனைக் காண்க.

போஜயித்வா யதாஶக்தி ப்ராஹ்மணான் வேதபாரகான் ।
பஸ்மோத்தூலிதஸர்வாங்கஃ த்ரிபுண்ட்ராங்கிதமஸ்தகஃ ॥ ௩ ॥

கோபீசந்தனலிப்தோ வா ஸ்வபாலேऽப்யூர்த்வபுண்ட்ரகஃ ।
ருத்ராக்ஷமாலாபரணஃ ஸபவித்ரகரஃ ஶுசிஃ ॥ ௪ ॥
ஸ்லோகங்கள் 3–4
பொருள் :

தன் சக்திக்கேற்றபடி வேதத்தில் புலமை பெற்ற பிராமணர்களுக்கு அன்னம் அளித்த பின், உடல் முழுவதும் விபூதி பூசி, நெற்றியில் திரிபுண்ட்ரம் அணிந்து இருக்க வேண்டும். மாற்றாக கோபீசந்தனம் பூசி, நெற்றியில் ஊர்த்துவபுண்ட்ரம் அணிந்து, ருத்ராக்ஷ மாலை, பவித்ரம் முதலியவற்றுடன் சுத்தராக இருக்கலாம்.

குறிப்பு :

இங்கே ஊர்த்துவ புண்டரம் குறிப்பிடப்பட்டது பஸ்மம் அணியும் தகுதி இல்லாதவர்களுக்கு என்றுணர்க. பாகாண்டிகளே இந்த புண்டரத்தை அணிவர் என்று சூத சங்கிதை பிரம்ம கீதை கூறுவதாலும் அறிக. அம்மட்டோ, இங்கே கோபிசந்தனத்தை மட்டுமே கூறி துளசி மாலையை கூறாமல் விட்டது. இவ்வாற்றால் விபூதி அணிய இயலாத ஒருவனுக்கு விதிக்கப்பட்டதே இந்த கோபிசந்தன ஊர்த்துவ புண்டரமாகும் என்பது வெளியானது.

இதனை தலைகீழாகப் புரட்டி, ஊர்த்துவபுண்டரத்தைச் சிறந்த வைதிக சின்னம் போலச் சொல்வது பஞ்சராத்திரிகளின் சாஸ்திரவிரோத பிடிவாதம். சைவ புராணத்தின் மத்தியிலே பஸ்மம், திரிபுண்ட்ரம், ருத்ராக்ஷம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ள போது, மாயாவாதிகளும் பஞ்சராத்திரிகளும் சிவசின்னங்களை இகழ்வது அவர்களின் அவைதிக இருளையே காட்டுகிறது.

7. சூதசம்ஹிதை — பிரம்மகீதையின் சைவ கர்ஜனை ஸ்கந்தபுராணாந்தர்கத சூதசம்ஹிதை, யஜ்ஞவைபவ காண்டம், பிரம்மகீதை

சூதசம்ஹிதையின் பிரம்மகீதை, ஸ்கந்தபுராணத்தின் யஜ்ஞவைபவ காண்டத்தில் வரும் சைவ வேதாந்த கிரந்தமாகப் பரம்பரையில் அறியப்படுகிறது. அங்கே சிவபரத்துவம் வெளிப்படையாக நிலைநாட்டப்படுகிறது. இதுபோன்ற சைவ பிரமாணங்கள் முன், “சிவன் கீழ், விஷ்ணு மேல்” என்று தாறுமாறாக கூச்சலிடும் பஞ்சராத்திர வாதம் சாஸ்திர வாதம் அல்ல; அது சம்பிரதாயப் பிடிவாதம்.

வேதம், புராணம், ஆகமம், திருமுறை ஆகியவை சிவனே பரம்பொருள் என்று கர்ஜிக்கும் போது, சிவசின்னங்களான திருநீறு, திரிபுண்ட்ரம், ருத்ராக்ஷம் ஆகியவற்றை இகழ்ந்து, ஊர்த்துவபுண்டரம், தப்தசக்ரம் முதலியவற்றை மேன்மைப்படுத்த முயல்வது சைவ சாஸ்திரத்தை நேராக எதிர்க்கும் அவைதிகப் போக்கு.

முடிவுரை

இத்யாதி ராம சேது மாஹாத்மிய புராண வசனங்களால் பஸ்மத்தின் பெருமையும், அதனை பராசரர், சிந்துத்வீபர் போன்ற முனிவர்கள் அணிந்ததும், பஸ்ம ஜாபால உபநிடதப் பெருமையும் நிலைநாட்டப்பட்டது.

பஸ்மம், திரிபுண்ட்ரம், ருத்ராக்ஷம், ருத்ரஸூக்தம், பஞ்சாக்ஷரம் — இவை அனைத்தும் சைவ நெறியின் வெளிப்படையான வைதிக அடையாளங்கள். இவற்றை விட்டுவிட்டு, பஞ்சராத்திர ஊர்த்துவபுண்டரத்தையும், கோபிசந்தனத்தையும், தப்தசக்ராதி அவைதிகச் சின்னங்களையும் உயர்த்திப் பேசுவது சாஸ்திர அறிவில்லாத குருட்டு வாதமே ஆகும்.

சிவபரத்துவத்தை மறைக்க, விஷ்ணுவே பரம், சிவன் ஜீவன், பஸ்மம் தாழ்ந்தது, திரிபுண்ட்ரம் தேவையற்றது என்று கூச்சலிடும் பஞ்சராத்திர, மாயாவாத வாதங்கள், இப்புராண வாக்கியங்களின் முன் சிதறிப் போகின்றன. வேதநெறியின் முடிவும், புராணங்களின் சாரமும், சைவ சித்தாந்தத்தின் மெய்ப்பொருளும் — சிவபெருமானே பரம்பொருள்; அவரது சின்னமே திருநீறு.

மூல நூல் சரிபார்ப்பு இணைப்புகள்

Comments